
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செயவதற்கு நிபந்தனையின்றி ரூ. 5 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறு மற்றும் குறு தொழில் தொடங்குவதற்கான சிறப்பு சலுகை விளக்க கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிவகங்கை முன்னோடி வங்கி அலுவலர் ஆர்.பெருமாள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், மதுரை காதி கிராமத் தொழில்கள் ஆணைய உதவி டி.வி.அன்புச்செழியன், சிவகங்கை நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் எம்.ஆர்.கோபால், சிவகங்கை மாற்றுத்திறனாளர் நல அலுவலர் சகுந்தலா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்களும் மாற்றுத்திறன் கொண்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மாற்றுத்திறனாளர்கள் சுயதொழில் செய்ய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. வங்கி கடன் தொகையில் 5 சதவீத டெபாசிட் தொகையை கடன்பெறுபவர்கள் செலுத்த வேண்டிய நிலை முன்பு இருந்தது. அந்த நிலை மாறி தற்போது 5 சதவீத தொகையையும் அரசே செலுத்துகிறது. மேலும் ரூ 5 லட்சம் வரை கடன்பெறுவோருக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு இச்சலுகைகளை வழங்குகிறது. சுயதொழில் செய்ய வங்கிக் கடன் கேட்டு வரும் மாற்றுத்திறனாளர்களின் வேண்டுகோளை அரசு அலுவலர்கள் விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment